காஷ்மீர் மாநிலம் குவாசிகண்ட் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஸ்ரீநகரில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜதுரா ரெயில் நிலையத்தில் நிற்க முயன்ற போது, அந்த ரெயில் திடீரென தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அந்த ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தின் அருகே இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் அந்த ரெயிலில் இருந்த பயணிகள் 26 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையின் முடிவிலேயே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரிய வரும் என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜதுரா ரெயில் நிலையத்தை சரி வர கவனிக்காமல் 200 மீட்டர் தூரம் வரை வேகமாக வந்து விட்டதாகவும், எனவே, அவசரம் அவசரமாக பிரேக் பிடிக்க முயன்றபோது, அந்த ரெயில் தடம் புரண்டு விட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்துதான் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்பிறகு, இதுதான் அங்கு நடைபெற்ற முதல் விபத்து என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, நேற்று ஒடிஸா மாநிலம் ஜார்சுகுடர் ரெயில் நிலையத்தில் கோரக்பட்- ஹவுரா இடையிலான சமலேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் சரக்கு ரெயிலும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.
5-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் புறப்பட்டு செல்வதற்காக போடப்பட்ட சிக்னலை, 3-வது பிளாட்பாரத்தில் சமலேஸ்வரி எக்ஸ்பிரஸ் தவறுதலாக புரிந்து கொண்டு ரெயிலை இயக்கி விட்டார். இதனால் அந்த 2 ரெயில்களும் ஒரே திசையில் அருகருகே உள்ள தண்டவாளங்களில் சென்று கொண்டிருந்தன.
இரண்டு தண்டவாளங்களும் மிக நெருக்கமாக சென்ற இடத்தில் அந்த 2 ரெயில்களும் உரசிக் கொண்டன. இந்த விபத்தில் சமலேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்த 6 பேர் காயம் அடைந்தனர். சில பெட்டிகள் சேதம் அடைந்தன. 2 ரெயில்களும் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இத்துடன் கடந்த 2 நாட்களில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments: on "காஷ்மீர் மாநிலத்தில் ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது 20 பேர் காயம்"
Post a Comment