தலைப்புச் செய்தி

Wednesday, November 30, 2011

அன்னிய முதலீட்டை எதிர்த்து தமிழகத்தில் டிச-1 கடையடைப்பு!


சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து வரும் டிசம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

கூட்ட முடிவில் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டையும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் 100 சதவித அன்னிய முதலீட்டையும் அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து பேரமைப்பு சார்பில் 5 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

தற்போது வரும் டிசம்பர் 1- ஆம் தேதி (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கடை அடைப்பு நடத்த அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு டெல்லியில் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் தமிழகத்தில் உள்ள வணிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அழைப்பு குறித்து எங்களின் அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசினோம். இதில் அகில இந்திய வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று வரும் டிசம்பர் 1- ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

தமிழகத்தில் உள்ள எம்.பி -க்கள் வணிகர்களுக்கு ஆதரவாக நின்று மத்தியில் குரல் கொடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வணிகர்களைக் காக்கும் வகையில் அன்னிய முதலீடு தமிழகத்திற்கு வர விடாமல் தடுக்க வேண்டும். இதற்காக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.

மத்திய அமைச்சர் ஆனந்தசர்மா கூறிய கருத்துகள் உண்மைக்கு மாறாக உள்ளது. தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் மட்டும் 20 லட்சம் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதை சார்ந்து ஏறக்குறைய ஒரு கோடி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தியா முழுவதும் 21 லட்சம் பேர்.

இப்படி இருக்கையில், அன்னிய நிறுவனங்கள் கையில் ஒப்படைத்தால் ஒரு சில லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய மந்திரி தெரிவிக்கிறார். இது கேலி கூத்தாக உள்ளது. விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பவர்களை இடைத்தரகர் என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கு எங்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னிய முதலீடு குறித்து எங்களுடன் அவர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?"

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அன்னிய முதலீட்டை எதிர்த்து தமிழகத்தில் டிச-1 கடையடைப்பு!"

Post a Comment