தலைப்புச் செய்தி

Monday, August 8, 2011

நில ஊழல்: எதியூரப்பாவுக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் சம்மன்

நில மோசடி ஊழல் தொடர்பாக முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடக சுரங்க ஊழல் விவகாரத்தில் முதல்வர் பதவியை இழந்த எதியூரப்பா தனது ஆதரவாளரான சதானந்த கெளடாவை முதல்வராக்கினார். இந்த ஊழல் தொடர்பான விசாரணையை முடக்கும் வகையில் கெளடாவை அவர் ஆட்டிப் படைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் பெங்களூரில் தனது குடும்பத்தினர் லாபம் அடையும் வகையில் நில மோசடியில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக, வரும் ஆகஸ்ட் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு எதியூரப்பாவுக்கு சிறப்பு லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதி சதீந்திர ராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே கர்நாடக பாஜகவில் நடந்து வரும் பெரும் கோஷ்டி சண்டையால் புதிய அமைச்சரவை பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எதியூரப்பாவின் ஆதரவாளர் கெளடாவுக்கு முதல்வர் பதவி கிடைத்துவிட்டதால், தனது தரப்புக்கு 2 துணை முதல்வர் பதவிகள் தரப்பட வேண்டும் என முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு தோற்ற ஜெகதீ்ஷ் ஷெட்டார் கோரி வருகிறார்.

இவருக்கு மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா, மூத்த தலைவரான அனந்த்குமார், முன்னாள் அமைச்சர் அசோக் உள்ளிட்டோரும் பாஜக டெல்லி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்,

ஆனால், ஒரு துணை முதல்வர் பதவி மட்டுமே ஷெட்டார் தரப்புக்குத் தர முடியும் என எதியூரப்பா-சதானந்த கெளடா தரப்பு கூறி வருகிறது. இன்னொரு பதவியை தங்களுக்கே வைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது.

ஷெட்டார் தரப்புக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டாலும், அந்தப் பதவியில் அவர் அமரக் கூடாது என்றும், வேறு ஒருவரைத் தான் நியமிக்க வேண்டும் என்றும் எதியூரப்பா நிபந்தனை விதித்து வருகிறார்.

மேலும் அமைச்சரவையில் மொத்தமுள்ள 34 பதவிகளில் 17 இடங்கள் தங்களுக்கே வேண்டும் என எதியூரப்பா கூறுவதை ஷெட்டார் ஏற்கவில்லை. தங்கள் தரப்பு முதல்வர் பதவியை விட்டுத் தந்ததால், 20க்கும் அதிகமான அமைச்சர் பதவிகளை, அதிலும் பணம் கொழிக்கும் முக்கியமான துறைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஷெட்டார் தரப்பு கூறுகிறது. இதை எதியூரப்பா தரப்பு ஏற்க மறுக்கிறது.

இதனால் புதிய அமைச்சர்களை இறுதி செய்ய முடியாமல் சதானந்த கெளடா அரசு முடங்கியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நில ஊழல்: எதியூரப்பாவுக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் சம்மன்"

Post a Comment