தலைப்புச் செய்தி

Monday, August 15, 2011

ஊழலுக்கு எதிராக பேச ஹஸாரேக்கு அருகதையில்லை - காங்கிரஸ்!


ஊழலுக்கு எதிராக கடுமையான லோக்பால் சட்டம் கொண்டுவர, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள அன்னா ஹஸாரேவைக் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. "ஊழல்வாதியான அன்னா ஹஸாரேக்கு இத்தகையதொரு போராட்டம் நடத்த எவ்வித அருகதையும் இல்லை" என காங்கிரஸ் கட்சி பிரமுகர் மனீஷ் திவாரி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
"அன்னா ஹஸாரேவின் கட்டுப்பாட்டிலுள்ள ட்ரஸ்டில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி ஸாவந்த் தலைமையிலான கமிசன் இவ்விஷயத்தைக் கண்டறிந்துள்ளது. தன்னுடைய பிறந்த நாள் விழா செலவுகளுக்காக ஹஸாரேயின் கட்டுப்பாட்டிலுள்ள ட்ரஸ்ட்களிலிருந்து அவர் வரம்புமீறி தன் விருப்பத்துக்குப் பணம் செலவழித்துள்ளதாக கமிசன் கண்டுபிடித்துள்ளது" என்றும் திவாரி கூறினார்.

"பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் வைத்த விமர்சனங்களின் மூலம், பிரதமரை மட்டுமின்றி தேசியக்கொடியையும் தியாகிகளையும் ஹஸாரே கேவலப்படுத்தியுள்ளார்" என்று கூறிய திவாரி, "நாட்டில் சமாதானமற்றச் சூழலை உருவாக்கவே ஹஸாரேயும் அவர் இயக்கும் முயற்சி செய்கிறது. இதனைக் காங்கிரஸ் எதிர்க்கும்" என்றும் கூறினார்.

"அன்னா ஹஸாரேயும் அவருடைய இயக்கமும் மக்களை வழிகெடுக்கின்றனர்" என மத்திய அமைச்சர் கபில் சிபலும் அன்னா ஹஸாரேக்கு எதிராக விமர்சனம் செய்துள்ளார். "எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையின் பேரில் ஹஸாரேக்கு அவருக்கு விருப்பமுள்ள இடத்தைத் தேர்வு செய்ய முடியாது. பிரதமருக்கு எதிரான அவரின் விமர்சனம் ஒரு காந்தியவாதியின் செயல்பாட்டுக்கு உகந்ததல்ல. ஹஸாரேயின் செயல்பாடுகள் ஜனநாயகத்துக்கு எதிரானவைகளாகும்" என்றும் அவர் கூறினார்.

"ஹஸாரே பின்பற்றுவது, காந்தி வழிப் போராட்டமல்ல" என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனியும் விமர்சனம் செய்துள்ளார். பிரதமருக்கு எழுதியக் கடிதத்தில் ஹஸாரே மோசமான வார்த்தைகளை உபயோகித்துள்ளார்" என்றும் அவர் கூறினார்.

நாளை மறுநாள் ஊழலுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸாரே துவங்க உள்ள நிலையில், காங்கிரஸ் ஹஸாரேவைக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஊழலுக்கு எதிராக பேச ஹஸாரேக்கு அருகதையில்லை - காங்கிரஸ்!"

Post a Comment