புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ.மேத்தா நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று பாராளுமன்றத்தின் வெளியே பாரதீய ஜனதா எம்.பி.க்கள் அத்வானி தலைமையில் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
குஜராத் மாநில ஆளுநர் கம்லா பெனிவால் லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ.மேத்தாவை நியமித்து அதற்கான உத்தரவை பிறப்பித்தார். குஜராத் மாநில அரசின் ஆலோசனையை பெறாமலேயே இவரை நியமித்ததாக கூறி ஆளுநருக்கு பாரதீய ஜனதா உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த பிரச்சினை இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. சபை கூடியதும் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் எழுந்து குஜராத் ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்றும் ராஜ் பவனை காங்கிரஸ் பவனாக மாற்றிவிட்டார் என்றும் காங்கிரசின் விருப்பத்துக்கு ஏற்ப ஆளுநர் செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்கள்.
உடனே காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து குஜராத் மாநில முன்னாள் உள்துறை மந்திரி பாண்டியா, கொலை குற்றவாளிகளுடன் இருப்பது போன்ற போட்டோவை காட்டினார்கள். இதற்கு நரேந்திரமோடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்றனர்.
இதனால் சபையில் கூச்சல்-அமளி ஏற்பட்டது இதனால் பகல் 12 மணி வரை சபையை சபாநாயகர் மீராகுமார் ஒத்தி வைத்தார். இந்த விவகாரம் பற்றி விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று சபாநாயகர் மீராகுமாரிடம் பாரதீய ஜனதா எம்.பி. ஹரேன் பதக் நோட்டீஸ் கொடுத்தார்.
இதேபோல் டெல்லி மேல் சபையில் விவாதிக்க அனுமதி கோரி மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதற்கிடையே குஜராத் கவர்னரை திரும்ப பெறக்கோரி பாராளுமன்றத்தின் வெளியே பாரதீய ஜனதா எம்.பி.க்கள் அத்வானி தலைமையில் போராட்டம் நடத்தினார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்கப்போவதாக அத்வானி கூறினார்.
0 comments: on "குஜராத் ஆளுநரை மாற்ற அத்வானி தலைமையில் போராட்டம்!"
Post a Comment