டோக்கியோ, மார்ச் 12: ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், அதனைத் தொடர்ந்த பின்னதிர்வுகளாலும் அணுமின் நிலையம் ஒன்றில் அணுஉலை வைக்கப்பட்டிருந்த பகுதி சனிக்கிழமை வெடித்துச் சிதறியது. இதனால் நாடு முழுவதும் அணுக்கதிர்வீச்சு பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம், சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,700-ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானில் வெள்ளிக்கிழமை 8.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சுனாமியால் கடல் நீர் பல கி.மீ. தூரத்துக்கு நிலப்பகுதிக்குள் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிலநடுக்கத்தை அடுத்த பின்னதிர்வுகள் பலமுறை உணரப்பட்டன.
இவற்றின் காரணமாக தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலுள்ள முதல் அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளியானது. அணுஉலைக்குச் சென்றுகொண்டிருந்த மின்சப்ளை நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் குளிர்விப்பான்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அணுஉலையைச் சுற்றி அழுத்தம் அதிகரித்து அந்த அணுஉலை வெடித்துச் சிதறியதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால், அணு உலை பாதுகாப்புக்காகக் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர்கள் மட்டுமே வெப்பம் தாங்காமல் வெடித்ததாகவும் இதனால் குறைந்த அளவு கதிர்வீச்சுக் கசிவு மட்டுமே வெளிப்படும் என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் யூகியோ எடானோ தெரிவித்தார். இந்த வெடிப்பால் 4 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் அணுக் கதிர்வீச்சு உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய அளவிலான அணுக்கதிர்வீச்சு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்று அரசு கூறியிருக்கிறது.
அணு மின் நிலையத்தைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் சுமார் 45 ஆயிரம் பேரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. குழாயில் வரும் குடிநீரைக் குடிக்க வேண்டாம் என்றும், வெளியில் செல்லும்போது ஈரமான துணியால் முகத்தை மூடிக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணுக்கதிர்வீச்சு ஆபத்து உள்ள பகுதிகளில் குளிர்சாதனக் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியும் அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, வெடிப்பு நடந்த அணுஉலைக்கு அருகிலுள்ள மற்றொரு அணுஉலையிலும் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், வழக்கத்தைவிட ஆயிரம் மடங்கு கதிர்வீச்சுக் கசிவு உணரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள அணுஉலைகள் அனைத்தும் நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இப்போது ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலநடுக்கத்தால் 10 அணு உலைகளை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
பலி எண்ணிக்கை...: கடந்த இரு நாள்களில் ஏற்பட்ட கோரச் சம்பவங்களுக்கு 1700 பேர் பலியானது இதுவரை உறுதி செய்யப்பட்டிருப்பதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் ஊடகம் ஒன்று சுமார் 1300 பேர் பலியாகியிருக்கலாம் என்று கூறியிருக்கிறது. அரசு தரப்பில் பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
4 ரயில்களைக் காணவில்லை: மியாகி, ஐவாட் மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் சென்றுகொண்டிருந்த 4 ரயில்களை சுனாமி அடித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ரயில்களில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை என ஜப்பான் ரயில் நிறுவனம் கூறியுள்ளது. சென்சகி தடத்தில் சென்ற மற்றொரு ரயில் தடம்புரண்டது. அதிலிருந்த 9 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டதாக போலீஸôர் கூறியுள்ளனர்.
200 தீவிபத்துகள்: மொத்தம் 3400 கட்டடங்கள் தரைமட்டமாகிவிட்டதாக இதுவரை தெரியவந்திருப்பதாகவும், 200 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
0 comments: on "ஜப்பான் அணுஉலையில் வெடிப்பு: நாடு முழுவதும் உஷார் நிலை"
Post a Comment