தலைப்புச் செய்தி

Saturday, March 12, 2011

சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்

சென்னை,மார்ச்.11:தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட சீட் தகராறில் சமரசம் ஏற்படுத்துவதற்காக கிடைத்த 3 சீட்டில் ஒன்றை தானமாக வழங்கிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மகளிரணி களமிறங்கியுள்ளது.


முஸ்லீம் லீக்கையும், முஸ்லீம் சமுதாயத்தையும் அவமானப்படுத்தும் நடவடிக்கையை தேசிய தலைமை மேற்கொண்டதாக லீகின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஃபாத்திமா முஸஃபர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டினார்.

தி.மு.க கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 இடங்கள் வழங்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை அளித்து பிரச்சனையை தீர்ப்பதற்காக லீகிற்கு கிடைத்த 3 இடங்களில் ஒன்றை தானமாக வழங்க தேசிய தலைவர் இ.அஹ்மத் சம்மதித்தார். மாநில தலைவர் பேராசிரியர் காதர்மைதீன், பொதுச்செயலாளர் அபூபக்கர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்காமல் இ.அஹ்மத் சீட் தானத்திற்கு சம்மதித்ததாக ஃபாத்திமா முஸஃபர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் ஒரு சீட்டை தானம் செய்துவிட்டு கேரளாவில் ஒரு சீட்டை அதிகமாக பெறலாம் என முஸ்லீம் லீகின் தேசிய தலைமை கூறுகிறது. கேரளத்தில் முஸ்லீம் லீக் பலமாக உள்ளது. கட்சியை பலப்படுத்துவதுதான் முஸ்லீம் லீக் தலைமையின் நோக்கமென்றால் கேரளத்திற்கு பதிலாக தமிழ்நாட்டில் கூடுதலாக ஒரு இடத்தை பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் கிடைத்த 3 சீட்டிலும் சொந்த சின்னத்தில் போட்டியிடத்தான் முஸ்லீம் லீகின் மாநிலக் கமிட்டி தீர்மானித்திருந்தது. இதற்கு விரோதமாக தி.மு.கவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் மேற்கொண்ட பேராசிரியர் காதர் மைதீனையும், பொதுச்செயலாளர் அபூபக்கரையும் தலைமைப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என ஃபாத்திமா முஸஃபர் தெரிவித்துள்ளார்.

செய்தி:பாலைவனத் தூது

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்"

Post a Comment