தலைப்புச் செய்தி

Thursday, January 20, 2011

லெபனானின் உள்ளக முரண்பாடுகளைத் தீர்க்க ஈரான் முன்வரவேண்டும்" - துருக்கி

லெபனானில் ஏற்பட்டுள்ள உள்ளக அரசியல் முரண்பாடுகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஈரான் முன்வரவேண்டும் என துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் கோரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த புதன்கிழமை (19.01.2011) ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துருக்கியப் பிரதமர், தெஹ்ரானுடைய முன்னெடுப்புக்களின் மூலம் லெபனானின் உள்நாட்டுப் பிரச்சினைகள் வெகுவிரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அமெரிக்க அனுசரணையுடன் கூடிய சிறப்பு விசாரணைக் கமிஷனின் அறிக்கை தொடர்பான சர்ச்சையினால், ஹிஸ்புல்லாஹ் அமைப்பைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் இராஜினாமா செய்ததையடுத்து பிரதமர் ஸஅத் ஹரீரியின் அரசாங்கம் கலைந்தது. இதனால் லெபனானில் மிகப் பெரும் அரசியல் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

2005 பெப்ரவரி 14 பெய்ரூட்டில் இடம்பெற்ற மாபெரும் குண்டுவெடிப்பினால் முன்னாள் லெபனானியப் பிரதமர் ஹரீரியும் மற்றும் 20 பிரமுகர்களும் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை நிகழ்ந்து இரண்டு வருடங்களின் பின்னரேயே மேற்படி படுகொலைச் சம்பவம் பற்றி ஆராய்வதற்கு விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அனுசரணையுடன் தோற்றுவிக்கப்பட்ட மேற்படி விசாரணைக் கமிஷன், இப்படுகொலைகளின் பின்னணியில் லெபனானின் போராளி அமைப்பான ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எனினும், ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இக்குற்றச்சாட்டினை மிக வன்மையாக மறுத்துள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் செயலாளர் நாயகம் செய்யித் ஹஸன் நஸ்ருல்லாஹ் கருத்துரைக்கையில், மேற்படி விசாரணைக் கமிஷனின் செயற்திட்டங்கள் மிகப் பயங்கரமானவை என்றும், அவை போராளிகள் அமைப்பைக் குறிவைத்து உருவாக்கப்பட்டவை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானிய அதிபர் அஹ்மதி நிஜாத் குறிப்பிடுகையில், லெபனானின் உள்நாட்டு அரசியல் குழப்பநிலையைச் சீர்செய்வது தொடர்பில் தமது நாடு சாத்தியமான எல்லா வழிகளிலும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், லெபனானின் உள்ளகப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்குவதற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "லெபனானின் உள்ளக முரண்பாடுகளைத் தீர்க்க ஈரான் முன்வரவேண்டும்" - துருக்கி"

Post a Comment