தலைப்புச் செய்தி

Sunday, January 9, 2011

நூலக புத்தகத்தை 76 ஆண்டுகள் கழித்து திரும்ப ஒப்படைத்த அமெரிக்கர்

மிச்சிகன் : "இப்படியும் நடக்கலாம்' என நாம் எதிர்பாராத வகையில் சில நிகழ்வுகள் விரைவாக அரங்கேறிவிடும். ஒருசில நிகழ்வுகள் எதிர்பாராமல் நடந்தாலும், பல நிகழ்வுகள் உள்நோக்கம் காரணமாக நடக்கின்றன என்பதுதான் நிதர்சனம். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்வும் இப்படிப்பட்ட ஒன்று தான். அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ளது, "மவுன்ட் கிளமென்ஸ் பப்ளிக் லைப்ரரி!' கடந்த 1934ம் ஆண்டு இந்த நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதிக்கு வந்த மெக்கி என்ற 13 வயது சிறுவன், "எ டாக் ஆப் ப்ளான்டர்ஸ்' எனும் பெயரில் மேரி லூயிஸ் என்பவர் எழுதிய கதை புத்தகத்தை எடுத்து சென்றான்.



வீட்டுக்கு சென்று புத்தகத்தை படித்த மெக்கி, அதில் வரும் கதையில் தனது மனதை பறிகொடுத்தான்; அந்த புத்தகத்தை தனது பொக்கிஷமாக நினைத்து, லைப்ரரியில் திரும்ப ஒப்படைக்காமல் காலம் கடத்தினான். ஒரு நாள் என ஆரம்பித்து பல வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளாக நீண்டு, முடிவில், 76 ஆண்டுகள் கடந்தன. ஆனாலும், மெக்கி அந்த புத்தகத்தை ஒப்படைக்கவில்லை. கடந்த வாரம் தனது பொக்கிஷ அறையை பார்வையிட்ட மெக்கிக்கு, குறிப்பிட்ட கதை புத்தகம் நினைவுக்கு வந்தது.

உடனே அந்த புத்தகத்தை தூசி தட்டி எடுத்தவர், வெகுவாக யோசித்து, அந்த புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்க முடிவெடுத்தார். அதன்படி, புத்தகத்துடன் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி, "மவுன்ட் கிளமென்ஸ்' நூலகத்திற்கு கூரியரில் அனுப்பி வைத்தார். நேரில் சென்றால், அபராதம் கட்ட வேண்டும் என்பதால் கூரியரில் அனுப்பினார். தற்போது 89 வயதான நிலையில், அரிசோனாவில் வசித்து வரும் மார்க் மெக்கி இதுகுறித்து கூறுகையில், "மேரி லூயிஸ் எழுதிய அந்த புத்தகத்தை நான் மிகவும் விரும்பிய காரணத்தால், "ரிட்டர்ன்' செய்யவில்லை.

அதை பழைய பொக்கிஷங்களில் ஒன்றாக வைத்து காப்பாற்றி வந்தேன். இறுதியில் என் மனசாட்சியே வென்றது. புத்தகத்தை திரும்ப ஒப்படைத்து விட்டேன்' என்றார். மவுன்ட் கிளமென்ஸ் நூலக இயக்குனர் டொனால்டு கூறுகையில், "மெக்கியின் இந்த செயலுக்காக அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது. மேலும், குறிப்பிட்ட புத்தகத்தின் புதிய பிரதி ஒன்று அவருக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும். மெக்கி அனுப்பி வைத்த புத்தகம் மற்றும் மன்னிப்புக் கடிதம் இரண்டையும், பொதுமக்களின் பார்வைக்கு வைக்க முடிவு செய்துள்ளோம்' என்றார்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நூலக புத்தகத்தை 76 ஆண்டுகள் கழித்து திரும்ப ஒப்படைத்த அமெரிக்கர்"

Post a Comment