தலைப்புச் செய்தி

Monday, January 17, 2011

வெள்ளச் சாவு 600ஐ தாண்டியது : மழை நீடிக்கும் என எச்சரிக்கை

ரியோ டி ஜெனிரோ : பிரேசில் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 600ஐ தாண்டியது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட டெரசோபோலீஸ் நகரில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு ராணுவம் விரைந்துள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.


கடந்த வாரம் துவங்கிய இந்த மழை தொடர்ந்து நீடிக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்று அந்நாட்டு வானியல் மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள டெரசோபோலீஸ் நகரில், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் விரைந்துள்ளது. மீட்புப் பணி, சடலங்களை அடையாளம் கண்டறிதல் மற்றும் மக்கள் இல்லாத இடங்களில் நடக்கும் கொள்ளை சம்பவங்களைத் தடுத்தல், தடைபட்ட சாலைகளைத் திறந்து விடுதல் ஆகிய பணிகள் ராணுவத்தின் முன் உள்ளன. எனினும், ரியோ டி ஜெனிரோ மாகாணத்தின் பல இடங்கள் மலைப்பாங்கான பகுதிகள் என்பதாலும், பல இடங்களில் மின்சாரம், தொலைபேசி, இணையம் இல்லாததாலும் அவற்றில் என்ன நடக்கிறது என்பதை விரைவில் தெரிந்து கொள்ள முடியவில்லை.

மேலும், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது 600ஐ தாண்டிவிட்டது. ஆனால், கனமழை மேலும் நீடிப்பதால், பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பல மலைப்பாங்கான பகுதிகளில் நிலம் இன்னும் ஈரப்பதத்தோடு இருப்பதால், பெய்து வரும் கனமழையால் மேலும் பல நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1967ல் கராகுவாட்டாடுபா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில், 430 பேர் பலியாயினர். அதையும் தாண்டி தற்போது பலி எண்ணிக்கை 600ஐ கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "வெள்ளச் சாவு 600ஐ தாண்டியது : மழை நீடிக்கும் என எச்சரிக்கை"

Post a Comment