தலைப்புச் செய்தி

Wednesday, December 22, 2010

அசாங்காவா? அமெரிக்காவா? பயங்கரவாதி யார்?

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் அமெரிக்காவின் தூதரகங்கள் தங்கள் நாட்டு அரசுத் தலைமைக்கு இரகசியமாக அனுப்பி வைத்த இரண்டரை இலட்சம் அறிக்கைகளை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்காவை ‘உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி’ என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் செனட் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர் மிட்ச் மெக்கானல் கூறியதை, அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வழிமொழிந்துள்ளார் ஜோ பிடன்.

இந்த உலகில் எது ஜனநாயக நாடு, எது பயங்கரவாத நாடு, எது ஒழுங்கங்கெட்ட நாடு (Rogue State), எது நட்பு நாடு என்பதை தாங்களே நிர்ணயிக்கத் தகுதியானவர்கள் என்கிற ஒரு மாயையில் இருக்கும் ஒரு நாட்டின் அரசுத் துணைத் தலைவர் இவ்வாறு வர்ணித்திருப்பது வியப்பளிக்கக் கூடியதல்ல. ஆனால், அதற்கான யோக்கியதை அமெரிக்க அரசிற்கோ அல்லது அதன் அரசியல் தலைவர்களுக்கோ இருக்கிறதா? என்பதை ஆராயும் முன்பு, விக்கிலீக்ஸ் மூலம் ஜூலியன் அசாங்கா செய்தது யாருக்கு பயனளிப்பது, யாருக்கு பாதிப்பானது என்பதை மதிப்பிட்டால், பயங்கரவாதி யார் என்பதை முடிவு செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

விக்கிலீக்ஸ் இதுவரை வெளியிட்டுள்ள பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவரும் அமெரிக்காவின் தூதர்கள் அல்லது தூதரகங்கள் அளித்த அறிக்கையில், மிக அதிகமான எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது அமெரிக்க தூதரகங்கள் அனுப்பிய இரகசிய அறிக்கைகளே. அது அமெரிக்காவை மிகவும் அதிகமாக கடுப்பேற்றியுள்ளது.

ஏனெனில் அந்த அறிக்கைகள் பலவும் நிதர்சனத்தையும், உண்மைகளையும் பிரதிபலிக்கின்றன என்பதால் அல்ல அமெரிக்காவிற்கு கோவம் வரக் காரணம். அவை யாவும் அமெரிக்கா உலகத்திற்கு இதுநாளும் மறைத்துவரும் இரண்டாவது முகத்தை ஆதாரப்பூர்வமாக அது அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன என்பதே.

உதாரணத்திற்கு 1. அமெரிக்காவோடு இந்தியா செய்துகொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துவந்த எதிர்ப்பை ‘மழுங்கடித்துள்ளோம்’ என்று 2007ஆம் ஆ்ண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட் அனுப்பிய இரகிய அறிக்கை, நமது நாட்டின் அரசியல் தலைமையை அமெரிக்கா எவ்வாறு வளைக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது மட்டுமின்றி, அது முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா ‘அயல் சக்தி’களாலஆட்டிவைக்கப்படுவதையும் வெளிக்காட்டிவிட்டது.

2. அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக உருவான அரசியல் எதிர்ப்பை உடைப்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா தினற்றவராக இருந்தார் என்று மற்றொரு இரகசிய அறிக்கை கூறுகிறது.

3. 2009ஆம் ஆண்டு மக்களவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸூம், பாரதிய ஜனதாவும் தனித்த பலத்துடன் ஆட்சிக்கு வர முடியாத சூழல் உள்ளதை குறிப்பிட்டுள்ள அமெரிக்கத் தூதர், இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் அது இந்திய- அமெரிக்க உறவிற்கு ‘உகந்ததா’ இருக்காது என்று கூறியுள்ளார். பாரதிய ஜனதாவும், காங்கிரஸூம் அமெரிக்காவிற்கு நெருக்கமான, உகந்த கட்சிகள் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

4. 2006ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் செய்த சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு, காஷ்மீரிலும் மற்ற மாநிலங்களிலும் தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி மக்களை இந்திய இராணுவமும், காவல் துறையும் சித்தரவதை செய்து வருவதையும், அதனை ‘கண்டுகொள்ளா’ ஒரு போக்கை இந்திய அரசு கடைபிடித்து வருகிறது என்பதையும் அமெரிக்க தூதர் வாஷிங்டனிற்குத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடக்கும் இப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களை அமெரிக்காவும் கண்டுகொள்ளாமல் இருந்துவருவதை அது வெளிப்படுத்துகிறது.

5. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15 கோடிப் பேராக உள்ள இஸ்லாமியர்களை, மத தீவிரவாதமும், பிரிவினைவாதமும் கொஞ்சமும் கவரவில்லை என்பதை தூதர் டேவிட் மல்்போர்ட் அனுப்பிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பனமுக பண்பாட்டிலும், வளர்ந்துவரும் ஜனநாயகத்திலும், துடிப்புடனுள்ள ஜனநாயகத்திலும் தாங்கள் முன்னேற முடியும் என்று இங்குள்ள இஸ்லாமிய மக்கள் நம்புகின்றனர் என்கிறது ஓர் அறிக்கை.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அசாங்காவா? அமெரிக்காவா? பயங்கரவாதி யார்?"

Post a Comment