நடுக்கடலில் சென்றபோது விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து உயிர் பிழைத்த மாணவிகள் உருக்கமான தகவலை தெரிவித்தனர்.
உயிர் பிழைத்த மாணவிகள்:
ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டினம் ஜலாலியா நகரைச் சேர்ந்தவர்கள் நேற்று மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுக்கு 2 படகுகளில் சுற்றுலா சென்றனர். அதில் ஒரு படகு கவிழ்ந்ததில் 13 பேர் பலி ஆனார்கள். இந்த கோர விபத்தில் சீனி உருது என்பவரது மனைவி பாத்திமா பர்ஜானா (வயது 35) பரிதாபமாக உயிர் இழந்தார்.
அதே படகில் அவருடன் சென்ற அவரது மகள்களான பள்ளி மாணவிகள் தவ்பிகா(14), ஆசிகா(11) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்தது குறித்து அவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-
மயங்கினோம்:
எங்களது படகில் பெண்கள், குழந்தைகள் என 38 பேர் இருந்தோம். படகில் சமையலுக்கு தேவையான பொருட்களுடன், ஒரு ஆடும் ஏற்றப்பட்டு இருந்தது. கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் பெரிய அலை சீறி எழுந்தது. அலையின் சுழலில் சிக்கிய படகு தள்ளாடியது. இதில் நாங்கள் அங்கும், இங்குமாக ஒருவர் மீது ஒருவர் மோதி விழுந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென்று படகு கவிழ்ந்தது. பொருட்களும், ஆட்களும் அதிகமாக இருந்ததாலேயே கடலுக்குள் படகு கவிழ்ந்தது.
இதனால் அனைவரும் தண்ணீரில் மூழ்கினோம். நீச்சல் தெரியாததால் அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடித்து மயங்கினோம். பின்னர் கண்விழித்து பார்த்தபோது ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தோம். எங்களது தாய் பாத்திமா பர்ஜானா என்ன ஆனார் என்று தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்தோம். பின்னர் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
இவ்வாறு கூறிவிட்டு கதறி அழுதனர்.
மகன்களை பறிகொடுத்த தந்தை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் சீனிமுகமது (வயது40). ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன்களான அப்துல்வகாப் (வயது 14) கலிலுர்ரகுமான்(12) ஆகிய இருவரும் படகு விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர். மகன்களை பறிகொடுத்த சீனிமுகமது கண்ணீருடன் கூறியதாவது:-
எனது மூத்த மகன் அப்துல்வகாப் கீழக்கரை இஸ்லாமியா மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், 2-வது மகன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஏற்கனவே மனைவியை இழந்த நான் மகன்களுக்காவே வாழ்ந்து வந்தேன். பள்ளித் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டதால் பெரியபட்டினத்தில் உள்ள எனது உறவினர்களுடன் தீவை சுற்றிப்பார்க்க மகன்களை அனுப்பிவைத்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் எனது மகன்கள் 2 பேரையும் பறி கொடுத்துவிட்டேன்.
இவ்வாறு சீனிமுகமது கூறினார்.
மீட்புப்பணியில் ஈடுபட்டவர்:
கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டவர்களில் ஒருவரான சங்குகுளி தொழிலாளர் துரை கூறியதாவது:-
சம்பவ இடத்திற்கு நாங்கள் விரைந்து சென்றபோது மூழ்கிய படகின் பக்கவாட்டு பகுதியை பிடித்தவாறு காப்பாற்ற வேண்டி பெண்கள் கதறி அழுதனர். சிலர் மயங்கிய நிலையில் தண்ணீரில் மூழ்கியும், மிதந்தபடியும் கிடந்தனர். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்று கூட எங்களால் பரிசோதிக்க முடியவில்லை.
அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் சிலரை காப்பாற்றுவதற்குள் தண்ணீர் இழுத்துச் சென்றது. முடிந்தவரை கண்ணில்பட்ட அனைவரையும் மீட்டு படகில் ஏற்றினோம். பழைய படகு என்பதால் அலையின் வேகத்தில் கவிழ்ந்து உடைந்துள்ளது.
பொருட்கள் மிதந்தன:
அந்த இடத்தில் கடலுக்குள் மூழ்கி தேடிப் பார்த்தோம். சகதி நிறைந்த அந்த பகுதியில் எதுவும் தென்படவில்லை. தண்ணீரில் மூழ்கி வேறு யாரேனும் இறந்திருந்தால் தீவுப் பகுதிகளில் ஓரிரு நாளில் உடல்கள் கரை ஒதுங்கும். அந்த பகுதி முழுவதும் படகில் கொண்டு சென்ற எண்ணை, உணவுப்பொருட்கள், மண்எண்ணை, துணிகள், உடைந்த படகின் சிதறல்கள், செருப்புகள் மிதந்து கொண்டிருந்தன..
இவ்வாறு துரை கூறினார்.





0 comments: on "கடலில் படகு கவிழ்ந்தது எப்படி? உயிர் பிழைத்த பள்ளி மாணவிகள் உருக்கமான பேட்டி"
Post a Comment