இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் தொடர்பாக ஈரானின் கருத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டெஹரானில் ஹஜ் யாத்ரீகர்கள் மத்தியில் பேசி கமேனி, பாலஸ்தீனம், ஆப்கன், பாகிஸ்தான், ஈராக் பிரச்சினைகளைப் பற்றிக் குறிப்பிட்டு, அங்கு அமெரிக்க ஆதிக்க சக்திக்கு எதிராக, அங்குள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமிய சமுதாயத்துக்கு உள்ளது என்று தெரிவித்தார். அப்போது, காஷ்மீரில் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போரிடுவதற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அதையடுத்து, டெல்லியில் உள்ள ஈரான் தூதரை வெள்ளிக்கிழமையன்று அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், கமேனியின் கருத்து கடும் ஏமாற்றமளிப்பதாகவும், இது இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையில் தலையிடும் செயல் என்றும் தெரிவித்தார்கள்.
அத்துடன், ஈரானின் நிலைப்பாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா. மன்றத்தில் ஈரானின் மனித உரிமை மீறல்கள் என்று கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானத்தில் முதல் முறையாக இந்தியா வாக்களிக்கவில்லை. வெள்ளிக்கிழமை இரவு நடந்த அந்த வாக்கெடுப்பில், இந்தியா உள்பட 57 நாடுகள் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன. இது விரிவாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான் என வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்பு ஈரானுக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில், இந்தியா ஈரானுக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மூன்று சந்தர்ப்பங்களில் காஷ்மீர் போராட்டத்துக்கு ஆதரவாக ஈரான் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும், காஷ்மீர் நிலைமையை காஸா மற்றும் ஆப்கானிஸ்தான் நிலவரங்களுக்கு இணையாகக் குறிப்பிட்டிருப்பதாகவும் வெளிறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
0 comments: on "இரான்-இந்தியா இராஜதந்திர முறுகல்"
Post a Comment