முவாற்றுப்புழா,செப்.6:சர்ச்சைக்குரிய வினாத்தாள் தயாரித்து அதன் மூலம் மதத்துவேசத்தை உருவாக்கிய முவாற்றுப்புழா நியூமென் கல்லூரி பேராசிரியர் டி.கே.ஜோசஃபை கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கையாக கல்லூரியை விட்டு நீக்கியது தண்டனை அல்ல என்றும் அவர் பாடம் கற்றுக் கொள்வதற்காக என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
இதுக்குறித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ள கல்லூரி மேலாளர் தாமஸ் மலேக்குடி அதில் கூறியிருப்பதாவது:"சாதாரண மரியாதையையும் இணக்கத்தையும் நிலைநாட்டுவதில் பேராசிரியர் என்ற நிலையில் ஜோசஃப் ஏற்படுத்திய வீழ்ச்சி கவலைக்குரியதாகும். மார்ச் 23-ஆம் தேதி நடந்த இண்டேர்னல் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வியை உட்படுத்தியதன் பொருத்தமில்லாமையைக் குறித்து டி.டி.பி ஆபரேட்டர் பேராசிரியரின் கவனத்தில் கொண்டுவந்தும் அதனை அவர் ஒரு பொருட்டாக கருதவில்லை. புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பாகங்களைத்தான் வினாத்தாளில் உட்படுத்தினேன் என்ற அவருடைய வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதில் மாற்றம் ஏற்படுத்தி ஒரு சமுதாயத்தையே ஆட்சேபிக்கும் விதமாக கேள்வியை தயாரித்துள்ளார்.
இதனைக் குறித்து ஒரு மாணவர் விடைத்தாளிலேயே குற்றஞ்சாட்டியிருந்தார். வினாத்தாளை திருத்திய பொழுதும் கூட இவ்விஷயத்தை நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுவரவோ, பிரச்சனையை தீர்ப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ பேராசிரியர் தயாராகவில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் மார்ச் 26 ஆம் தேதி ஏற்பட்ட எதிர்பாரா சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது.
கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிந்தே இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டது என்பது கல்லூரி நிர்வாகத்தின் நம்பிக்கைக்கு கேடு விளைவித்தது. இவ்விவகாரத்தில் கல்லூரி முதல்வர் மன்னிப்புக் கோரியதால்தான் தான் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டேன் என்ற அவருடையை அறிக்கையும் எங்களை குற்றவாளியாக சித்தரிக்க வைத்தது.
வினாத்தாள் தயாரித்தது சர்ச்சையாகியது தனது கருத்து சுதந்திரத்தை பாதித்துள்ளதாக ஜோசஃப் கூறியதும் நியாயப்படுத்த முடியாது. சர்ச்சைக்குரிய வினாத்தாள் தயாரித்ததற்கு பேராசிரியர் தண்டிக்கப்பட்டுவிட்டார் என்ற கூற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.
வினாத்தாள் தயாரித்தது, அதன் பெயரில் அவர் தாக்கப்பட்டது இரண்டும் வேறாகும். அவருக்கு தண்டனை அளிப்பது தேசத்தின் நீதிபீடமாகும். பேராசிரியர் மீது நடந்த தாக்குதலை கல்லூரி நிர்வாகம் கண்டித்ததோடு அவருடைய சிகிட்சைக்காக 6 லட்சம் ரூபாயை சேகரித்து அளித்துள்ளோம். பேராசிரியர் மீதான தாக்குதல் தனிப்பட்ட ரீதியில் அல்ல. பிரச்சனையின் அடிப்படையிலானதாகும்.
சமூகத்தின் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சரியான பார்வையை அளிக்கவேண்டிய பேராசிரியரின் புறத்திலிருந்து சமூக வெறுப்பும் துவேசமும் ஏற்படும் வகையில் செயல்கள் உருவாகக் கூடாது. சர்ச்சைக்குரிய வினாத்தாளின் மூலம் சமூகங்களுக்கிடையே பிளவுகள் உருவாகி மோசமான முறையில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலையவும் செய்தன.
சர்ச்சைக்குரிய வினாத்தாள் தயாரித்ததுத் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் விசாரணை ஏற்கனவே துவங்கியிருந்தது. மார்ச் 26 ஆம் தேதி தொடுபுழயில் மோதல் உருவான பொழுதுதான் கல்லூரி நிர்வாகத்திற்கு இவ்விவகாரம் தெரியவந்தது. அன்றைய தினமே ஜோசஃப் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தலைமறைவான ஜோசஃபை போலீஸ் கைதுச் செய்து சிறையிலடைத்தது எல்லோரும் அறிந்த செய்தியாகும்.
உயர்நீதிமன்றத்தின் இரண்டு வழக்கறிஞர்கள் உட்படும் விசாரணைக் கமிஷன் இச்சம்பவத்தைக் குறித்து ஆய்வுச்செய்து அளித்த அறிக்கையை கல்லூரி நிர்வாகத்தின் பொதுக்குழு கூடி விவாதித்தபிறகு ஜோசஃபிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட விளக்கம் திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்கு அளித்த பதிலும் திருப்தி இல்லாததன் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பேராசிரியர் மேற்கொண்ட செயல்கள் போன்று வேறு எவரும் செய்யாமலிருக்கவும் நிறுவனங்களை சமாதான ரீதியில் நடத்திச் செல்லவும் ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதிலும் இந்த நடவடிக்கை இன்றியமையாதது" என கல்லூரி மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து நீக்கியதுத் தொடர்பான கடிதம் ஜோசஃப் கையில் கிடைத்தது.
வழக்குத் தொடர முடிவு:இது குறித்து கருத்து தெரிவித்த ஜோசப்பின் சகோதரி ஸ்டெல்லா, "என் சகோதரர் நீக்கப்பட்டது சட்ட விரோதமானது. ஜோசப் 25 ஆண்டுகாலம் அந்தக் கல்லூரியில் பேராசிரியராக இருந்துள்ளார். அவரை திடீரென நீக்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் எங்களது குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கல்லூரி நிர்வாகம் தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் அவரை பணியில் சேர்த்துக் கொள்ளும் என நம்புகிறோம். ஒரு வேளை அவ்வாறு செய்யத் தவறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments: on "மதத்துவேசம்:கல்லூரியிலிருந்து ஜோசஃப் நீக்கப்பட்டது பாடம் பெறவே - நிர்வாகம்"
Post a Comment