பார்ப்பன அதிகாரி பி. சங்கரைத் தொடர்ந்து, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் நான்கு பார்ப்பனர்களைத் தேடித் தேடி பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. பி. சங்கர், சுகவனேஸ்வர், லட்சுமி பிரானேஷ், என். நாராயணன் என்று நீடித்த பார்ப்பன தலைமைச் செயலாளர்கள் பட்டியலைப் பார்த்து கொதித்துப் போனது நாம் மட்டுமல்ல, தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியும்தான். முன்னாள் அமைச்சர் க. பொன்முடி ஒரு நீண்ட கட்டுரையையே எழுதி தி.மு.க.வின் கண்டனத்தைத் தெரிவித்தார்.
அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில், "சூத்திரர்" கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் ஆட்சியில் என்ன நிலைமை?
எல்.கே. திரிபாதி என்ற ஒரிசா பார்ப்பனரைத் தேடிப் பிடித்து பதவியில் அமர்த்தினார் கலைஞர் கருணாநிதி. அதற்கடுத்து, அவர் ஓய்வு பெற்றபோது இரண்டாண்டுகளுக்கு முன், கே.எஸ்.சிறீபதி என்ற பார்ப்பனர் அந்தப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் ஓய்வு பெற்றபோது மத்திய அரசிடம் வாதாடி, 6 மாத காலம் பதவி நீடிப்பு பெற்றுத் தந்தது மட்டுமல்ல, தற்போது மாநிலத்தின் தலைமைத் தகவல் அதிகாரியாக நியமித்துள்ளது 'சூத்திரர்' அரசு. (நேர்மையான தலித் அதிகாரி உமாசங்கருக்குத் தண்டனை - தங்கள் விருப்பங்களுக்கு எல்லாம் தாளம் போடும் பார்ப்பனர் சிறீபதிக்கு வெகுமானம்; எப்படி இருக்கிறது சமூகநீதி!)
சிறீபதியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பார்ப்பன அம்மையார்
எஸ். மாலதியை தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது தி.மு.க. அரசு. இவர்கள் ஒவ்வொருவரும் நியமிக்கப்பட்ட போதும், ஏராளமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகளின்
சீனியாரிட்டியை புறந்தள்ளியே நியமிக்கப்பட்டார்கள் என்பது வேறு செய்தி!
சங்கர் முதல் மாலதி வரை, தொடர்ந்து ஏழு பார்ப்பனர்களே தலைமைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு நடந்தது இல்லை. திராவிட இயக்க ஆட்சி என்று கூறிக்கொள்வோர் ஆட்சியில்தான் இந்த சமூக நீதிக்கு விரோதமான போக்கு.
பார்ப்பனர் ஜெயலலிதா நான்கு பார்ப்பனர்களை உயர் பதவியில் அமர்த்தினார். அடுத்து வந்த "சூத்திரர்" கலைஞர் கருணாநிதி மூன்று பார்ப்பனர்களை வெட்கமின்றி தலைமைச் செயலாளர்களாக நியமித்துள்ளார். இந்த இரண்டு ஆட்சிகளுக்கும் நடைமுறையில் என்ன வேறுபாடு என்று கேட்க விரும்புகிறோம்.
'வாழும் பெரியார்' கலைஞர் தலைமையிலான "சூத்திர" ஆட்சியைப் பாதுகாப்பதே தங்கள் கடமை என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறிவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்த அநீதியை எதிர்த்து வாய் திறக்காதது ஏன்?
தலைமைச் செயலாளர் மட்டுமல்ல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த பல தமிழர்கள், கல்வியாளர்களைப் புறக்கணித்து விட்டு, பார்ப்பன அம்மையார் மீனா என்பவரை நியமித்திருக்கிறது இந்த சூத்திர ஆட்சி!
நிதி, உள்துறை, சுகாதாரம், கல்வி, பொதுப்பணி போன்ற முக்கிய துறைகளின் செயலாளர்களாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்காத 'நவீன தீண்டாமை'யும் கோட்டையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பத்திரிகைகள் எழுதும்போது மட்டும், சூத்திரன் என்பதால்தான் தன்னைப் பார்ப்பன ஏடுகள் பிராண்டு கின்றன என்று கலைஞர் கருணாநிதி புலம்புவது வாடிக்கை. தங்கள் ஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகைகளை பார்ப்பான், பார்ப்பான் பத்திரிகை என்று பக்கத்துக்கு பக்கம் எழுதும் 'முரசொலி'யைக் கேட்கிறோம். இந்த சமூகநீதிக்கு விரோதமான பார்ப்பன நியமனங்களை என்னவென்று அழைப்பது?
பத்திரிகை என்றால் மட்டும் பார்ப்பனர்களை எதிர்ப்பது, உயர் பதவி என்று வந்துவிட்டால் பார்ப்பனர்களைத் தேடிப் பிடித்து அமர்த்தி அழகு பார்ப்பது என்பது இரட்டை வேடம் அல்லவா? இந்த பாசாங்கு நடவடிக்கைகளை பார்ப்பனரல்லாத மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் இந்த அக்கிரமத்தை கோடானுகோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தொடர்ந்து ஏமாற மாட்டார்கள், எச்சரிக்கை!
0 comments: on "தலைமைச் செயலாளர்கள் என்றாலே பார்ப்பனர் தானா"
Post a Comment