லக்னெள: அயோத்தி நில விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இறுதிக் கட்ட முயற்சியாக இந்த வழக்கில் சம்பந்தபட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆஜராக வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் வரும் 24ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எந்தத் தரப்புக்கு சாதகமாக இருந்தாலும் மதக் கலவரம் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வன்முறை, கலவரம் ஏற்படாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.
தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் கூறியுள்ளன.
இந் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு இறுதிக் கட்டமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நீதிமன்றம் முயற்சிக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் கடந்த 13ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி டி.வி. சர்மா, வழக்கில் வாதிடும் அனைத்து வழக்கறிஞர்களும் செப்டம்பர் 17 (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது பிரச்சனையைச் சமரசமாக தீர்த்துக் கொள்ள நீதிபதிகள் முயற்சி மேற்கொள்வர்.
இந் நிலையில் இந்தச் சமரச முயற்சி குறித்து விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், அதன் அகில உலர பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துடன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே இறுதிக் கட்ட சமரச முயற்சி என்ற பெயரில் எக் காரணத்தைக் கொண்டும் தீர்ப்பை ஒத்திவைக்கக் கூடாது என்று அகில பாரத ஹிந்து மகாசபாவும் வக்ஃப் சன்னி மத்தியக் குழு சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அறிவித்தபடி வரும் 24ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
0 comments: on "அயோத்தி நில விவகாரம்-இன்று இறுதிக் கட்ட சமரச முயற்சி"
Post a Comment