சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த சமயத்தில் உடலில் ஆணிகளும் ஊசிகளும் செலுத்தப்பட்டு ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சித்திரவதை செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து கொழும்பிலுள்ள சவுதி தூதரகம் முன்பு ஓர் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கு செல்கின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை சவுதி அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் உள்ள சவுதி தூதரகம் முன்பு பெருந்திரளாகக் கூடி நின்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டதோடு பலவித வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஆரியவதிக்கு நடந்தது போன்ற கொடுமை வேறு எவருக்கும் நடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை வலியுறுத்துவது இவர்களுடைய ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாக இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு சவுதி தூதரகம் முன்பு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அரசியல் பிரமுகர்கள், ஆர்வலர்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்று திரும்பியிருந்தவர்கள் என்று பல தரப்பினராக சுமார் 400 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
மத்தியகிழக்கிற்கு வேலைக்கு செல்வோருக்கு அரசாங்கம் வழங்கிவருகின்ற உதவி ஒத்தாசைகள் போதாது என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் சவுதி தூதரகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
source : தமிழ்வின்
0 comments: on "பணிப்பெண் சித்திரவதையை கண்டித்து, சவுதி அரேபிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்"
Post a Comment