தலைப்புச் செய்தி

Wednesday, November 14, 2012

சார்மினார் அருகே தடை உத்தரவு நீடிக்கிறது! எம்.ஐ.எம்முடன் காங்.பேச்சுவார்த்தை!


ஹைதராபாத்:ஆந்திர மாநில காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வாபஸ் பெற்றுள்ள மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் (எம்.ஐ.எம்) கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சார்மினார் அருகே கோயில் விரிவாக்க பணிகள் தொடர்பாக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்ட முடிவை மறு பரிசீலனை செய்யக்கோருவதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அதேவேளையில் தங்களின் முடிவை மாற்றிகொள்ளமாட்டோம் என்று எம்.ஐ.எம் அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சார்மினாருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் பாக்கியலெட்சுமி கோயில் கட்டுமானப்பணிக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், அதையும் மீறி காங்கிரஸ் அரசு சங்க்பரிவார்களுடன் கூட்டு வைத்து கோயில் கட்டும் பணிகளை தொடரஅனுமதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை எம்.ஐ.எம் விலக்கிக்கொண்டது. இந்நிலையில் காங்கிரஸ் அரசை ஆட்டம் காணவைத்துள்ள எம்.ஐ.எம்மின் முடிவு குறித்து ஆராய காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் சத்தியநாராயணா உள்பட 24 அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எம்.ஐ.எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றபோதிலும் ஹைதராபாத் மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து எம்.ஐ.எம் பிரதிநிதி முஹம்மது மாஜித் ஹுஸைனை நீக்கமாட்டோம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹைதராபாத் மாநகராட்சி  சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி 3 வருடம் மேயர் பதவியில் தொடரலாம். இந்நிலையில் சார்மினார் சுற்றுவட்டார பகுதிகளில் தடை உத்தரவு நீடிக்கிறது. அப்பகுதியில் கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பலத்த
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சார்மினார் அருகே தடை உத்தரவு நீடிக்கிறது! எம்.ஐ.எம்முடன் காங்.பேச்சுவார்த்தை!"

Post a Comment